
உலகத்தில் வேறு எங்கும் இல்லாத, பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஓர் பிரிவினை சாதி."சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம்" நான்கு வர்ணங்களை கடவுளே உண்டாக்கினார் என்பது இதன் பொருள், இந்து மத வர்ணாசிரம தர்மத்தின் படி பிராமண, சத்ரிய, வைசிய , சூத்திர என்ற நான்கு வர்ணங்கள் உருவாக்கப்பட்டு அதெதற்கு என தொழில்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அவற்றில் உயர்வு தாழ்வு மனு தர்மத்தின் படி கற்பிக்கப்பட்டு சாதிகள் மூலமாக அவை இன்றும் கட்டிக்காப்பாற்றப்பட்டு வருகிறது. ஒருவர் மதம், நாடு, மொழி, தொழில் மாறலாம் ஆனால் சாதி மாற முடியாது. இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர்களைவிட சாதி பெருமை பேசும் சுய சாதி பற்றுள்ளவர்களே அதிகம். ஒவ்வொருவரும் தமது சாதியை உயர்வாகக் கருதி தமக்கு மேல் உள்ள ஆதிக்க சாதியைப் பற்றி கவலை கொள்ளாமல், தமக்கு கீழே உள்ள சாதியானை கீழாக நடத்துவதில் சிறிதும் வெட்கப்படுவது இல்லை. அடிப்படை வேலைகளை செய்யும் மக்களை தீண்டாமை என்ற பெயரில் கேவலப்படுத்தி, சேரி மக்களாக இழிவு படுத்துவது இந்த நூற்றாண்டிலும் தொடர்வது நமது மனித குலத்திற்கே அவமானமாகும். பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் உழைப்பால் உரிமைகள் பெற்று இன்று படித்து, பட்டம் பெற்று அரசுப் பணியில் உள்ள நாம் எந்த சாதியால் ஆண்டாண்டு காலமாக இழிவு படுத்தப்பட்டோமோ, உரிமை மறுக்கப்பட்டோமோ அந்த சாதியில் பெயரால் இட ஒடுக்கீடு கோருவோம். ஆனால் சாதி ஆதிக்கத்தையும், சாதி இழிவையும், சாதி பாகுபாட்டையும் ஒழிக்க அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.
No comments:
Post a Comment